புல்லட் ரயில் திட்டம் - குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு

மும்பை - அஹமதாபாத் நகரங்களுக்கிடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கென நிலங்களை எடுப்பதற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ ஆயிரம் விவசாயிகள் இது குறித்து பிரமாண பத்திரங்களை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

புல்லட் ரயில் திட்டத்திற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் 1,400 ஹெக்ர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 1,120 ஹெக்டேர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது. ஏறக்குறைய 6,000 பேருக்கு இழப்பீடு வழங்க வேண்டியதுள்ளது. மும்பை - அஹமதாபாத் இடையே 500 கி.மீ தூரத்திற்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில் மணிக்கு 320 முதல் 350 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்த வழித்தடத்தில் 12 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மொத்தத்தில் 1.10 லட்சம் கோடி நிதி தேவைப்படும் இத்திட்டத்திற்கு ஜப்பானின் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவி வழங்க உள்ளது.

புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த ஐந்து தனித்தனி மனுக்களை குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி வி.எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது விவசாயிகள், தங்களைப்போல விவசாயம் செய்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை இத்திட்டம் பாதிப்பதாக வாதிட்டனர். இத்திட்டத்திற்கு கடனுதவி செய்யும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் வழிகாட்டுமுறைகளுக்கு மாறாக தற்போது நிலம் கையகப்படுத்தப்படுவதாக தெரிவித்த அவர்கள், 2015 செப்டம்பரில் ஜப்பான் இத்திட்டத்தில் பங்கு பெற ஆரம்பித்த பிறகு 2013ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை குஜராத் அரசு நீர்த்துப் போகச் செய்ததாகவும், அதனால் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு தொகை பெருமளவு குறைந்து போனதாகவும் கூறியுள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மனுக்களுக்கு தேவையான பதில் மனுக்களை தாக்கல் செய்யாமல் மத்திய அரசு காலந்தாழ்ந்தி வருவதால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகவும், பாதிப்புக்குள்ளான 1,000 விவசாயிகளும் இத்திட்டத்திற்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தை அணுகுவர் என்றும் அவர்கள் தரப்பு வழக்குரைஞர் ஆனந்த் யாக்னிக் தெரிவித்தார்.

More News >>