செல்வத்திற்கு வழிவகுக்கும் வாஸ்து!!!
வீட்டினுள் அமைதி நிலைத்திருப்பது என்பது மிக அரிய விஷயம் இந்த காலக்கட்டத்தில். எவ்வளவு சம்பாதித்தும் வீட்டினுள் ஒரு பைசா நிற்பது இல்லை. எப்போதும் கஷ்டம். மனதினில் அமைதியில்லா நிலை இவற்றிற்கு காரணம் நமது வாஸ்து என்றே நம் மனம் கூறும், இது மாதிரி குழப்பத்தில் உள்ளவர்களுக்கான வாஸ்த்துக்கள் சில,
நமது வீட்டை வாரம் ஒரு முறை உப்புத்தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். வீட்டின் கீழ் நிலை, மேல்நிலையிலுள்ள தண்ணீர் தொட்டிகளை 90 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டின் எதிரில் குப்பைத் தொட்டி இருக்கக் கூடாது. நமது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் உள்ள வெளிப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பை கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீரோவின் உள்ளே மஞ்சள் துண்டு வைத்து பணம் மற்றும் நகைகளை வைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். இதனால் நமது செல்வநிலை உயர்கிறது.
நமது வீட்டின் அருகில் காசாப்பு கடை இருந்தல் கூடாது. பாறைகளின் மேல் நமது வீட்டின் குடியிருப்பு கட்டிடம் இருக்கக் கூடாது. ஏரி குளங்களில் மனை அமைக்கக் கூடாது.
கோயில் சொத்துக்கள், கோயில் இடங்கள், போன தலைமுறை மற்றும் முன் காலங்களில் கோயில் இடமாக இருந்தது என்றால் அந்த இடங்களில் கட்டாயமாக குடியிருப்பு அமைக்கக் கூடாது.
தார் சாலைக்கு தாழ்வாக மனை இருத்தல் கூடாது. வீட்டின் வடகிழக்கு பகுதியின் மீது மரங்கள், செடிகொடிகளின், நிழல்கள் விழக்கூடாது.
வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள் என்று சொன்னால், அரசு, ஆல், புளி, நாவல், நெல்லி, எருக்கு, பனைமரங்கள், மூங்கில் மரங்கள், கற்றாளை, காட்டு மரங்கள், அசோக மரம், புங்கை, எலுமிச்சை, வில்வம், முள் உள்ள மரங்கள் மற்றும் செடிகள் ஆகியனவாகும்.
ஏரி, குளம், ஆறு, கால்வாய் போன்றவற்றை தள்ளி நமது இல்லம் அமைய வேண்டும். துளசிமாடம் தென்கிழக்கு, வடமேற்கில் அமைய வேண்டும்.
வீட்டின் பிரமஸ்தானம் மிக மிக முக்கியம். அந்த இடத்தை மிகவும் சர்வ ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
பூஜை அறையின் கதவில் மணி இருத்தல் கூடாது. வீட்டிற்குள் மிதியடிகள் போட்டு நடக்கக்கூடாது.
செல்லப்பிராணிகள் வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது. காம்பவுண்ட்டின் உள்பகுதியில் வைத்துக் கொள்ளலாம்.
பச்சை வாஸ்து மூங்கில் என்று கடைகளில் விற்பதை வாங்கி வீட்டினுள் உபயோகிப்பது மிகவும் தவறு. கண்ணாடி மணிகள் (Crystal) வீட்டின் முன்பு தொங்க விடுவது தவறு. பறவைகளை கூண்டில் வைத்து வளர்ப்பதும் தவறு.
மந்திர தந்திரம் தெரிந்தவர்களை நமது வீட்டில் அனுமதிப்பது தவறு.
சன்னியாசிகள் ஓரிரு நாள் தங்குவது தவறில்லை. எப்பொழுதும் நமது வீட்டில் தங்க வைப்பது தவறு.
வீட்டினுள் எந்த அறையும் இருட்டாக இருத்தல் கூடாது.
வீட்டின் மாடிப்படிகள் முதலில் கிழக்கு, வடக்காக ஏறுவது தவறு.
முன்னோர்களின் படங்கள் வரவேற்பு அறையின் வடக்கு திசைப் பார்த்து வைத்துக் கொள்ளலாம்.
வீட்டின் ராஜநிலை என்னும் தலைவாசலில் ஆனி, இரும்பு சம்மந்தப்பட்ட விஷயங்கள் வரக்கூடாது.
தலைவாசலின் கதவு தேக்கு மரத்தில் அமைப்பது, தேக்கம் என்று பொருள்படும். அதனால் தலைவாசலுக்கு தேக்கு மரம் தவிர்க்கப்பட வேண்டும். மற்ற அறைகளுக்கு அமைத்துக் கொள்ளலாம். கண்டிப்பாக தலைவாயிலின் மரம் நமது இந்திய மரமாகவும், பலம் வாய்ந்த மரமாகவும், நமது செல்வ நிலையை உயர்த்தக் கூடிய மரமாகவும், எடை குறைந்த மரமாகவும் அமைய வேண்டும்.
ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த இல்லத்தில் ஜீவ காருண்யம் இருக்காது என்பது உண்மை. அதை வைத்து அந்த இல்லம் சரியான வாஸ்து அமைப்பில் உள்ளதா? என உணரலாம்.
படுக்கை அறையில் கண்ணாடி உபயோகப்படுத்த வேண்டாம்.
எக்காரணம் கொண்டும் ஒரு வீட்டின் ஒரு முனையை உடைத்து கட்டிடம் கட்ட வேண்டாம்.
நமது வீட்டின் வடக்கும், கிழக்கும் நமது வாய் மற்றும் மூக்கிற்கு இணையானது. இது எப்பொழுதும் போதுமான அளவு திறந்திருக்க வேண்டும். அது போல வடக்கும் கிழக்கும் சகல செல்வங்களும் வரும் வழியாகும். அங்கு அடைப்புக்கள் இருந்தால் உடைத்து எரியுங்கள்.
தெற்கும் மேற்கும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க உதவும் வழிகள் போன்றது. தேவையில்லாமல் அதிக திறப்புக்கள் இருக்கக் கூடாது. தெற்கும் மேற்கும் வேண்டாத விசயங்கள் வரும்வழி, திறந்திருந்தால் உடனடியாக மூடி வையுங்கள். அதிகமாக திறந்தால் அது ஆபத்து.