கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு..!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இருவருக்கும் கேல் ரத்னா விருது வழங்க விளையாட்டுத் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில், தற்போது, அந்த பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 4 ஆண்டுகள் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு கொடுக்கப்படும், இந்திய விளையாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவர்கள் இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருது 8 பேருக்கு வழங்கப்படவுள்ளது. தேசிய அளவில் சிறப்பாக விளையாடினால் கொடுக்கப்படும் அர்ஜூனா விருது, 20 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
தடகள வீரர், வீராங்கனைகள் நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், ஹிமா தாஸ், ஹாக்கி வீரர், வீராங்கனைகள் மன்பிரீத் சிங், சவிதா ஆகியோருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.