5லட்சம் மதிப்பிலான புதிய காப்பீடு திட்டம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாடுமுழுவதும் சுமார் 10 கோடி மக்கள் பயன்பெரும் வகையில் ஆயுஷ்மான் பாரத் என்னும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி வருகிற செப்டம்பர் 23ந் தேதி ராஞ்சியில் துவக்கி வைக்கவுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க. அரசு பதவி ஏற்று 4 வருடங்கள் கடந்த நிலையில் 2018-2019ம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அதில் பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முக்கியமானதாக கருதப்படுவது தேசிய சுகாதார மற்றும் பாதுகாப்பு திட்டம் என்ற ஒரு புதிய காப்பீடு திட்டம்.

ஆயுஷ்மான் பாரத் என பெயரிடப்பட்டுள்ள இந்த காப்பீடு திட்டம் மூலம் நாடுமுழுவதும் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைய உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 5 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் காப்பீடு மூலம் மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும்.

பிரதமர் மோடியின் கனவு திட்டம் என கூறப்படும் இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு சார்பாக சுமார் 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீத செலவையும் ஏற்கும். சுமார் 12 ஆயிரம் கோடி ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பாக ஒதுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயனாளர்கள் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பலனை பெற முடியும்.

இந்த திட்டம் செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். செப்டம்பர் 25ம் தேதி பிரதமர் மோடிக்கு அன்று நேரமில்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆயுஷ்மான் பாரத் என்னும் இந்த புதிய காப்பீடு திட்டத்தினை 2 நாட்கள் முன்னதாகவே அதாவது செப்டம்பர் 23ம் தேதியே ராஞ்சியில் துவங்கிவைக்கிறார் பிரதமர் மோடி. பின்னர் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் அமலுக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகின.

More News >>