எடப்பாடி என்னை பார்த்து பயப்படுகிறார்: கருணாஸ் மீது வழக்கு பதிவு
ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரை வம்பிழுத்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பாக ராமநாதபுரம் திருவாடானை தொகுதியில் அதிமுகவின் இரட்டையிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் கருணாஸ்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை கருணாஸ் இருந்த இடமே தெரியாமல் இருந்தது. அவர் மறைந்த பின், இரு அணிகளாக பிரிந்த அதிமுக வின் எந்த அணியில் சேர்வது என்பது குறித்து குழம்பி போனார் கருணாஸ். முதலில் சசிகலா அணியிலும் பின்னர் எடப்பாடி அணியிலும் மாறி மாறி தற்போது எந்த அணியில் உள்ளார் என்பதே ஒரு குழப்பத்தில் நம்மை சிக்கவைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு திமுக சார்பாக நடத்தப்பட்ட மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்று அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தினார் கருணாஸ்.
இந்நிலையில்,கடந்த 16ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை கண்டு பயப்படுவதாக கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், காவல்துறை அதிகாரி ஒருவரை பார்த்து முடிந்தால், நேருக்கு நேர் காக்கிசட்டையில்லாமல் மோதிப்பார்க்குமாரும் சவால் விடுத்துள்ளார். சர்ச்சை பேச்சுக்களையும், ஜாதி ரீதியாகவும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேசிய இந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவ துவங்கியதும், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதில், தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவும், அவர்களை பற்றி அவதூறு பேசியதற்காகவும் இணையதளங்களில் வெளியான காட்சிகளை சாட்சியாக வைத்து 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்.