தினகரன் முதல்வராக வேண்டும்... இளைஞர் தற்கொலை மிரட்டல்
தினகரன் முதல்வராக்க கோரியும், 18 எம்.எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும், சென்னையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தைவெளி அபிராமபுரத்தில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளி அருகே உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் மீது ஏறி மர்மநபர் ஒருவர் ஒருமணி நேரமாக தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பத்திரமாக மீட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், "அந்த நபர் ராயபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்றும், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்பான 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் , 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும், டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும், எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினரிடம் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்
மேலும் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நபர் கடந்த ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கோபுரத்தில் ஏறி இதேபோன்று தற்கொலை மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.