ஒடிசாவில் கரையை கடக்கும் புயல்... வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
மத்திய வங்க கடலில் நிலைகொண்ட புயல் சின்னம் ஒடிசாவில் இன்று கரையை கடப்பதால் வட தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கில் 360 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் சின்னமானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கலிங்கபட்டினத்துக்கும், கோபால் பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். இன்று 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புயல் சின்னத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.