பாலியல் தொல்லை - ஆசிரியைகள் 24 மணி நேரமும் புகார் செய்யலாம்
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து உதவி கோருவதற்கு தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் எந்நேரமானாலும் ஆசிரியைகள் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆசிரியைகள் புகார் தெரிவிக்க இயலாமல் உள்ளது என்ற தகவலின் அடிப்படையில், பாதிக்கப்படும் ஆசிரியைகள் உதவி கோருவதற்கு 14417 என்ற தொடர்பு எண்ணை அரசு அறிவித்துள்ளது. இந்த எண் இரவு பகல் 24 மணி நேரமும் செயல்படும்.
கடந்த மார்ச் மாதம், மாணவர்கள் வழிகாட்டல் பெறுவதற்காக இந்த எண் அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்நேகா என்ற அரசு சாரா சேவை நிறுவனம் அரசுடன் இணைந்து மனசோர்வுற்ற மாணவ மாணவியருக்கு ஆலோசனை வழங்கி வந்தது.
தேர்வு நேரங்களில் மட்டுமே மாணவ மாணவியர் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி பெற்றனர். மற்ற நாட்களில் இந்த எண்ணுக்கு அதிக அழைப்புகள் வராத காரணத்தால், அதே எண்ணை ஆசிரியைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கும் ஆசிரியைகள் பற்றிய விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும், இப்புகார்களை பெற்று பரிசீலிக்க தனியாக ஒரு குழுவினர் செயல்படுவார்கள் என்றும் கல்விதுறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.