தோள்பட்டை வலியைப் போக்கும் பர்வத ஆசனம்
தொடர்ந்து கணினி முன் அமர்ந்து வேலை செய்களில், நமது தோள்ப்பட்டை மிகவும் பாதிப்படைகிறது. அதனால் சாதாரண நிலையை உங்களால் உணர முடியாது. இந்த ஆசனம் உங்கள் வலியைக் குறைத்து சுகத்தைத் தரும்.
முதலில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்திக் கொண்டு அமர வேண்டும். வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் படத்தில் உள்ளது போன்று மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு பின்பு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக உடலை மேல் நோக்கி தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.
இது தான் பர்வத ஆசன முறை ஆகும். இந்த ஆசனத்தை முதலில் சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம். நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். மூட்டு வலி உள்ளவர்கள் வலி இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்ய கூடாது.
முதலில் சாதராண மூச்சில் செய்து விட்டு பயிற்சியை முடித்த பின்னர் ஆழ்ந்து மூச்சு விட வேண்டும். 10 முதல் 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை செய்து விட்டு படிப்படியாக மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.
முதலில் கைகளை தளர்த்திய பின்னர் மெதுவாக தரையில் உட்கார்ந்து கால்களை தளர்த்த வேண்டும். பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்படி செய்வதால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.
சுவாச உறுப்புகள் நன்றாக செயல்படவும், தோள்பட்டை வலி, கை மூட்டு வலி குணமாகவும் பர்வத ஆசனப் பயிற்சி உதவுகிறது.