சம்பள பாக்கி... அரவிந்தசாமி- மனோபாலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு
By Radha
சதுரங்க வேட்டை-2 பாகத்துக்கான சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கு, சமரச தீர்வு மையத்திற்கு மாற்றப்பட்டது.
நடிகர் அரவிந்த்சாமி, நடிகை திரிஷா நடித்துள்ள படம் சதுரங்கவேட்டை-2. மனோபாலா தயாரிப்பில் இந்த படத்தை, என்.வி.நிர்மல்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் வழங்க தயாரிப்பாளர் மனோபாலாவுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் மனோபாலாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அரவிந்த்சாமியின் வழக்கு, நீதிபதி எம்.சுந்தர் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோபாலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரவிந்த்சாமியின் சம்பள பாக்கியை வழங்காமல் படத்தை வெளியிட போவதில்லை என்றும், இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் நடிகர் அரவிந்த்சாமி, தயாரிப்பாளர் மனோபாலா ஆகிய இருவரும் அக்டோபர் 12ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.