ஜெயலலிதா வெற்றிடம் நிரப்பப்பட்டதாக கருதவில்லை - விஜயகாந்த்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டதாக நான் கருதவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் அதிமுக தவிர திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.

இந்நிலையில், தேமுதிக தென்சென்னை மேற்கு மாவட்ட சார்பில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேக் வெட்டினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டதாக நான் கருதவில்லை. பொதுத்தேர்தல் தான் அதை முடிவு செய்யும். தினகரன் வெற்றி குறித்து அந்த தொகுதியில் போட்டியிட்டவர்களிடம் கருத்து கேளுங்கள். நான் கருத்து கூற முடியாது” என்றார்.

தினகரன் வெற்றி பெற்றதற்கு திமுக தான் காரணம் என்று அதிமுக கருத்து தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, ”இது தோற்பவர்களின் வழக்கமான புலம்பல்தான். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது தான் தேமுதிக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்” என்றார்.

More News >>