கர்நாடகா அரசுக்கு நெருக்கடி?... எம்.எல்.ஏக்கள் ஆட்டம் ஆரம்பம்
கர்நாடகா காங்கிரஸ்- மத சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் 27 பேர் மகாராஷ்டிராவில் தனித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், கடந்த 20 நாட்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்கி ஹோலி சகோதரர்கள் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க ஆபரேஷன் கமலா மூலம் செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக, ம இடையே வார்த்தை மோதல் இருந்து வருகிறது.
இதனிடையே ஹாசன் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி, "பாஜகவினர் இந்த கூட்டணி அரசை கலைக்க முயற்சித்து வருகின்றனர். மக்களுக்காக செயல்படும் இந்த அரசை கவிழ்க்க யாராவது முயன்றால் அதை மக்கள் பார்த்துக் கொண்டிராமல் பொங்கி எழ வேண்டும்"எனக் கேட்டுக்கொண்டார்.
கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி மக்களை தூண்டும் வகையில் பேசியதாக ஆளுநர் வஜுபாய் வாலா விடம் புகார் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதே போல ஆபரேஷன் கமலா மூலம் தங்களது கூட்டணி அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்து வருவதாக பாஜக மீது ஆளுநரிடம் புகார் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் தொடங்கியுள்ள ஆட்சிக்கான பரமபதம் ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.