ஆசிய கோப்பை- இந்தியாவிற்கு 174 ரன்கள் இலக்கு!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் - 4 சுற்று இன்று முதல் தொடங்கின. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் முதலாவது சூப்பர் - 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்பம் முதலே அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள், ரன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனபோதும், நிதான ஆட்டத்தை கடைபிடித்த பங்களாதேஷ் அணியின் ஆட்டக்காரர்கள், இறுதி வரை போராடி, 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளனர்.
ஜடேஜா அபாரம்:
பாகிஸ்தான் அணியுடனான லீக் சுற்று போட்டியில், ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதில், இன்றைய போட்டியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுதான் நல்ல சான்ஸ் என்று நினைத்த ஜடேஜா அபாரமாக பந்து வீசி, 10 ஓவர்களுக்கு வெறும் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மறுபுறம் புவனேஷ்குமார் மற்றும் பும்ரா தங்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக செயல்பட்டு, தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால், 49.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை பறிகொடுத்த பங்களாதேஷ் அணி, இந்திய அணிக்கு வெறும் 174 ரன்களையே இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்த எளிய இலக்கை இந்திய அணி ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடினாலே அதிக விக்கெட்டுகள் இழப்பின்றி வெற்றி பெற முடியும். நேற்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியிடம் ஆப்பு வாங்கிய பங்களாதேஷ், இன்றைய போட்டியில் வென்றாக தீவிரமாக போராடவும் வாய்ப்புள்ளது.