ஒடிசாவை தாக்கிய தயே புயல்... 8 மாவட்டங்கள் பாதிப்பு

தயே புயலால், ஓடிசாவின் 8 மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா - ஒடிசா இடையே உருவான புயலுக்கு, ‘தயே’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் இன்று ஒடிசா மாநிலம் கோபால்பூரில் கரையை கடந்து தாக்கியது.

புயல் தாக்கியபோது கன மழை கொட்டியது. கஜபதி, கஞ்சம், பூரி, ராயகடா, காலஹண்டி, கோரபுட், மால்கங்கிரி, நபரங்க்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்தது.

இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியிருப்பதால், மேலும் இரு தினங்களுக்கு ஒடிசாவில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து காற்றின் வேகம் 80 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த புயலால் தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

More News >>