20 ரூபாய் கொடுத்தால் ஓட்டுப் போடுவார்களா? - டிடிவி தினகரன் கேள்வி
தினகரன் கேள்வி 20 ரூபாய் கொடுத்து பின்னர் பணம் தருகிறேன் என்றால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து டிடிவி தினகரன் அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜெயலலிதா இல்லை இனி ஆட்சிக்கு வர முடியாது, இருக்கும் வரை பதவியை அனுபவித்து விட்டுச்செல்லலாம் என்று நினைப்பபவர்கள் எண்ணத்தை ஆர்.கே.நகர் பொய்பித்துவிட்டது.
நான் ஆரம்பம் முதலே அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று தெரிவித்தேன் அதுதானே நடந்தது. 20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கியதாக சொல்கிறார்கள். 20 ரூபாய் கொடுத்து பின்னர் பணம் தருகிறேன் என்றால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? அவ்வளவு நம்பிக்கை என் மீது மக்களுக்கு இருந்தால் நான் ஏன் 20 ரூபாய் தந்திருக்க வேண்டும்? சும்மாவே ஓட்டு கேட்டிருக்கலாமே.
திமுகவும் நானும் கூட்டுச்சதி என்கிறார்கள். கேலிக்கூத்தாக இல்லையா? 70 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி பெரிய கூட்டணியுடன் நிற்பவர்கள் இப்படி வருவார்களா? திமுகவின் தலைமையின் தவறான கணக்கீடு காரணமாக அவர்கள் தோற்றார்கள். அவர்கள் கட்சி வாக்குகள் எனக்கு விழுந்திருக்கலாம்.
சசிகலா புஷ்பா சந்தித்தார், நீங்கள் அரசியலில் இல்லாத நேரத்தில் நான் கட்சிக்குள் வந்தேன். தற்போது உங்கள் செயல்பாடு, துணிச்சல் எனக்கு பிடித்துள்ளது. எதிர்காலத்தில் உங்கள் தலைமையின் கீழ் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என்றார். தவறுகளை விட்டு வருபவர்களை புறக்கணிக்க முடியாது” என்றார்.