தான்சானியாவில் பயங்கர விபத்து: படகு கவிழ்ந்து 136 பேர் பலி
தான்சானியா நாட்டில் நேற்று படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 136 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சாயா நாட்டில் இருந்து மற்றொரு தீவுக்கு சுமார் 400 பேர் பயணம் செய்த படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவுக்கு லேக் விக்டோரியா ஏரி வழியாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பயணம் செய்த 400க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முற்கட்ட தகவலில், சுமார் 100 பேர் பலியானதாக தெரியவந்தது.
இந்நிலையில், இதன் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. காணாமல்போயுள்ள பலரை மீட்கும் பணியில் இரண்டாவது நாளாக இன்றும் ஈடுபட்டு வருகின்றனர்.
படகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில், அதிக எண்ணிக்கையில் பயணிகளை படகில் ஏற்றி சென்றது தான் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, படகு நிறுவனத்தின் உரிமையாளரை அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், படகு விபத்து சம்பவத்தை அடுத்து, நான்கு நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.