ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது!
பிரான்ஸ் நாட்டின் தசால்த் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2012-ம் ஆண்டு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், தற்போது மோடி அரசு அதே ரக விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் இதில் ஊழல் நடந்து உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
ரபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றியதில் இந்திய அரசாங்கம் பெரிய அளவில் ஊழல் செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானம் இந்திய அரசு வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த குற்றாசாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான பிரான்காய்ஸ் ஹோலாண்டே இணையதளம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார் அப்போது, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் எங்களுக்குப் பரிந்துரை செய்தது எனவும், எங்களுக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த மத்திய அரசு, போர் விமானங்களை உற்பத்தி செய்யும் ஒப்பந்தமானது பிரான்சில் உள்ள டசால்ட் என்ற நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே போடப்பட்ட வர்த்தக ரீதியான ஒரு முடிவு எனவும், இதற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என தெரிவித்தது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்து
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தை பற்றி தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலாண்டே நன்றி தெரிவிப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.