விமானத்தில் இயந்திர கோளாறு... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
சென்னையில் இருந்து தோகாவிற்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 254 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சென்னையிலிருந்து தோகாவிற்கு 254 பயணிகள்,7 விமான பணியாளர்கள் மொத்தம் 261 பேருடன் இன்று காலை கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதை விமானி கண்டுப்பிடித்து அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.
பின்னர், இழுவை வாகனம் மூலம் விமானம் இழுத்து வரப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உடனடியாக சரிபார்க்க முடியாத நிலை உள்ளது.
இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னை நகரில் உள்ள பல்வேறு தனியார் உணவக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாளை அதிகாலை விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு உடனடியாக கவனிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.