சுனாமி நினைவலைகளில்..மக்கள்

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக மக்களுக்கு மறக்க முடியாத பேரிடர் நாள். சுனாமி என்ற ராட்சத அலை கொந்தளித்து எழுந்த தினம் இன்று. சுனாமி என்ற பெயரை அதுவரை தமிழக மக்கள் கேள்விக்கூட பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், சுனாமிக்கு பிறகு இந்த பெயரை சாகும் வரையில் மறக்கவும் முடியாது. அதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது தான் சுனாமி.

பச்சிளங் குழந்தை முதல் பெரியவர்கள் வரை என யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாமல் கடலுக்குள் இழுத்துச் சென்றது சுனாமி.கடலுக்குள் உருவான நில நடுக்கம் ஆழி பேரலையாய் உருவெடுத்து ஊருக்குள் புகுந்து மக்களை கடலுக்குள் இழுத்து சென்று கொன்று குவித்தது. எங்கும் மக்களின் அழும் குரல். பார்க்கும் இடமெல்லாம் பிணங்கள்.

இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இனி இதபோன்ற இயற்கை பேரிடர் எங்கேயும் வரக்கூடாது என நினைத்து கண்ணீர் விடாத ஆட்களே இருக்க மாட்டார்கள். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும், வேளாங்கண்ணி, குளச்சல் உள்ளிட்ட நகரங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுனாமிக்கு பலியாயினர்.

சுனாமியின் கோர தாண்டவம் நடந்து இன்றுடன் 13 ஆண்டுகள் முடிந்துள்ளன. ஆனால், இந்த தினத்தையும், இதன் பாதிப்புகளையும் யாராலும் மறக்கமுடியாது.

சுனாமியின் நினைவுநாளான இன்று, குளச்சலில் 414 பேர் புதைக்கப்பட்ட கல்லறை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர். கொட்டில்பாட்டில் 199 பேர் இறந்த இடத்திலும் மணக்குடியில் 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, வழிபாடுகள் நடத்தினர்.

More News >>