திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...

புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் மொகரம், சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை காரணமாக திருப்பதிக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை முதல் வைகுண்டத்தில் உள்ள 31 அறைகள் நிரம்பி சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதனால் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களும், மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களும், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு அனுமதிக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தனர்.

சுமார் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். போதிய வசதிகள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். 67 ஆயிரத்து 465 பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் . 33 ஆயிரத்து 790 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ 1 கோடியே 60 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

More News >>