இறந்த தொழிலாளி கதறிய மகன் குவிந்தது உதவி பிறந்தது சர்ச்சை !
By SAM ASIR
கடந்த வாரம் டெல்லியை சேர்ந்த துப்புரவு தொழிலாளி அனில் (வயது 37), பாதாள சாக்கடைக்குள் இறங்கும்போது தவறி விழுந்து பலியானார். இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு 20 அடி சாக்கடைக்குள் இறங்க முயற்சித்தபோது, கயிறு அறுந்ததில் அவர் கீழே விழுந்தார்.
உயிரற்ற அவரது சடலத்தின் அருகே அவரது மகன் நின்று கொண்டு கதறி அழுவது போன்ற படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியானது. இறந்த அனிலின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்வதற்காக டெல்லியை சேர்ந்த உதய் பவுண்டேஷன் (Uday Foundation) என்ற அரசு சாரா சேவை நிறுவனம் கேட்டோ (Ketto) என்ற இணையதள நிறுவனத்துடன் இணைந்து நிதி திரட்டியது.
அனில் அருகே நின்று கதறி அழுதுகொண்டிருந்த சிறுவனின் தோற்றம் அனைவர் மனதையும் உருக்கியது. 3,000க்கும் மேற்பட்டோர் அனில் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய முன் வந்தனர். அதன் மூலம் ஏறத்தாழ 57 லட்சம் ரூபாய் உதவியாக குவிந்தது.
நிதியுதவி குவிந்த நிலையில், அனிலின் சடலத்தின் அருகே நின்று அழுது கொண்டிருந்த சிறுவன், அவருக்குப் பிறந்தவன் அல்ல என்ற தகவல் வெளியாகியது. அனில் யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் சிறுவனின் தாய் ராணி, தன் மூன்று குழந்தைகளுடன் மூன்று ஆண்டுகள் அனிலுடன் வசித்து வருகிறார் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் அனிலே இக்குழந்தைகளை ஆதரித்து வந்துள்ளார் என்றும் அனிலின் சகோதரி கீதா தெரிவித்துள்ளார்.
"இந்த தகவல் அனிலை இழந்து வாடும் குடும்பத்தின் துக்கத்தை எந்தவிதத்திலும் மாற்றப்போவதில்லை. உச்சநீதிமன்றம், வயதுக்கு வந்த இருவர் இணைந்து வாழ்வதற்கு உரிமையுள்ளது என்று தெரிவித்துள்ளது. குடும்பத்தின் துயரத்தை மாற்றுவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது. சேர்ந்துள்ள நிதி, குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படும். அவர்கள் 18 வயதாகும் வரைக்கும் அதை எடுக்க இயலாது. அதுவரைக்கும் அந்த வைப்பு நிதி மூலம் வரும் வட்டி தொகை, அவர்கள் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உதவும்," என்று சேவை அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.