துருவ் விக்ரமின் பிறந்த நாள் கிப்ட்: வைரலாகும் வர்மா சுவர் போஸ்டர்!
துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை முழுவதும் ‘வர்மா’ சுவர் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்த விக்ரமின் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர்.
துருவ் விக்ரமுக்கு நாளை (செப்டம்பர் 23) பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ’வர்மா’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கான விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவுக்காக படத்தின் சுவர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை விக்ரமின் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், டுவிட்டரில் #VarmaFirstLook என்ற ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாக்கி வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம், 10 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி பெற்ற மாபெரும் வெற்றியை வர்மா பெறுமா? விக்ரமுக்கு ‘சேது’ என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த பாலா, விக்ரம் மகன் துருவ் விக்ரமுக்கு அதே மேஜிக்கை செய்வாரா? என்பது படத்தின் ரிலீசுக்கு பிறகே தெரியும் !