ஒரு புகைப்படத்தால், போட்டு உடைக்கப்பட்ட பேட்ட ரகசியம்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் பேட்டை. இப்படத்தில், ரஜினி மிசா கைதியாக நடிப்பதை, இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று வெளிச்சப்படுத்தியுள்ளது.
காலா படத்திற்கு பிறகு, இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் ரஜினி. இப்படத்தில், ரஜினியுடன் மோதும் வில்லன்களாக விஜய்சேதுபதி மற்றும் பாலிவுட் புகழ் நவாசுதின் சித்திக் நடித்து வருகின்றனர். முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாக, சிம்ரன் மற்றும் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். ரஜினிக்கு முதன்முறையாக அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ‘பேட்ட’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில், புத்தகம், காம்பஸ், ஸ்கேல்கள் பறப்பது போன்று காட்சியமைக்கப்பட்டதால், ரஜினி இப்படத்தில் ஆசிரியராக நடித்து வருகிறார் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில், தற்போது ஜிகர்தண்டா, சதுரங்க வேட்டை, அறம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ராமச்சந்திரன் துரை ராஜுடன் ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில், ரஜினியின் கையில், ’மிசா 109’ என பச்சைக் குத்தப்பட்டதை ஜூம் செய்த ரசிகர்கள் மூலம் பேட்ட படத்தில் ரஜினி மிசா கைதியாக நடிக்கிறார் என்ற விசயம் லீக்காகியுள்ளது.
1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி நிலை நாட்டையே புரட்டிப் போட்டது. அப்போது, அரசியல்வாதிகள் முதல் ரவுடிகள் என பலரின் மீது மிசா சட்டம் பாய்ந்தது.
பேட்ட படத்தில், 1975 காலக்கட்டத்தில் ரஜினியும் கைது செய்யப்பட்டவரா? இது ஒரு பீரியட் படமா? இல்லை, பிளாஷ்பேக்கில் ரஜினி பெரிய ரவுடியாகவும், பின்னர் திருந்தி ஆசிரியர் பணியில் ஈடுபடுகிறாரா? என பல யூகங்களுக்கு இந்த ஒரு புகைப்படம் வித்திட்டுள்ளது.
மேலும், வரும் பொங்கலுக்கு அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்துக்கு போட்டியாக ரிலீசாகவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.