அலுவலகத்திற்கு செல்லும் அன்பர்களின் கவனத்திற்கு!
அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்கள் உடல் மீது சிறிது கூட அக்கறை இல்லாமல் சில வேலைகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். அவை என்னென்ன மற்றும் அதன் விளைவைப் பார்ப்போம்.
காலை உணவைத் தவிர்க்காதீர்!
பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்க வேண்டும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.
இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.
காபி, டீ குறையுங்கள்!
காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.
வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்
வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான இன்ஸ்டன்ட் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட்ஸ் ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.
இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்
டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி
அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!