சர்வதேச சிறந்த நடிகர் விருதை வென்றார் விஜய் !
லண்டனில் நடைபெற்ற ஐ.ஏ.ஆர்.ஏ சர்வதேச விருது வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதிற்கு நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற மெர்சல் திரைப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்புகளில் தோன்றி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மெர்சல் படத்தை ஐ.ஏ.ஆர்.ஏ சர்வதேச விருதுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனுப்பி வைத்தனர். பல சுற்றுப் போட்டிகளுக்கு பிறகு, இறுதி சுற்றில் நடிகர் விஜய் மற்றும் மூன்று ஹாலிவுட் நடிகர்கள் தேர்வான நிலையில், நடிகர் விஜய் ஐ.ஏ.ஆர்.ஏ விருதினை வென்று இந்திய சினிமா மற்றும் தமிழ் சினிமாவிற்கு புதிய பெருமையை தேடி தந்துள்ளார்.
நடிகா் விஜயை தவிர்த்து, இந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களான ஜோஷிவா ஜாக்சன், கென்னத் ஓகோலி, டாய்ம் ஹாசன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில்,ஐ.ஏ.ஆர்.ஏ அமைப்பின் சார்பாக ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், சிறந்த சர்வதேச நடிகருக்கான விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு, வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
மருத்துவ ஊழலை மையமாக வைத்து மெர்சல் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்திற்காகவே மெர்சல் படத்திற்கு முன்னதாக இங்கிலாந்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது, சிறந்த சர்வதேச விருதினையும் விஜய் தட்டிச் சென்றுள்ளது தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளது.