குஜராத் மாநிலம்: முதல்வர் பதவியை ஏற்றார் விஜய் ரூபானி

காந்தி நகர்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றிப் பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வராக 2வது முறையாக விஜய் ரூபானி இன்று பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கடந்த 9ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதனால், முன்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, இந்த ஆட்சியிலும் 2வது முறையாக முதல்வர் பதவியை ஏற்பார் என்றும், துணை முதல்வராக நிதின் படேல் பதவி ஏற்பார் என்றும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. மேலும் புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் 20 பேர் இடம் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், காந்திநகர் சச்சிவாலயா திடலில் விஜய் ரூபானி இன்று முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவரை தொடர்ந்து, துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ரவி சங்கர் பிரசாத் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மற்றும் பாஜ ஆளும் 18 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும், துணை முதல்வர்களும், பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் விழாவில் பங்கேற்றனர்.

More News >>