தவான், ரோகித் மிரட்டல் சதம்.. பஸ்பமானது பாகிஸ்தான் !
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. லீக் சுற்றில் பாகிஸ்தானை ஓடவைத்த இந்திய அணி, துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானின் அதிரடி சதத்தால், சூப்பர் 4 சுற்றிலும் மண்ணைக் கவ்வியது.
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களான இமாம்-உல்-அக், ஃபகர் ஜமான், பாபர் அஜாம் ஆகியோர் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சர்ப்ரஸ் கான் மற்றும் சோயப் மாலிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சர்ப்ரஸ் அகமது குல்தீப் யாதவ் பந்துவீச்சில், கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 44 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அரைசதம் கடந்த சோயப் மாலிக், பும்ராவின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 78 ரன்களுக்கு அவுட்டானர்.
பின்னர் ஆடிய ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹாசன் அலி ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவுட்டாகினர்.
இறுதியில், 50 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி, 237 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக பும்ரா, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். புவனேஷ்குமார், ஜடேஜா, கேதார் ஜாதவ் விக்கெட்டுகளை வீழ்த்த தவறினர்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேஸ் செய்ய இந்திய அணி ஆயத்தமானது.
இந்தியாவின் பலம் வாய்ந்த துவக்க ஆட்டக்காரர்களான, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பாகிஸ்தான் பவுலர்களின் பந்துகளை சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்க விட்டனர்.
100 பந்துகளில் அதி விரைவாக சதமடித்த ஷிகர் தவான், தேவையற்ற ரன் அவுட்டினால் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவானை தொடர்ந்து, சதம் விளாசிய ரோகித், 111 ரன்களை எடுத்தார். மற்றொரு முனையில் ஆடிய அம்பத்தி ராயுடு 12 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 39.3 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 238 ரன்களை கடந்து இமாலய வெற்றியை பெற்றது.
ரோகித் சர்மா 7000:
இந்த போட்டியில், 94 ரன்களை விளாசிய போது, ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 7000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை அடைந்தார். 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, அதிவேகமாக 7000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.
கேப்டன் விராட் கோஹ்லி 161 போட்டிகளிலும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 174 போட்டிகளிலும் 7000 ரன்களை கடந்து முன்னிலை வகிக்கின்றனர்.