ஆந்திர எம்.எல்.ஏ சுட்டுக் கொலை... காவல்நிலையத்திற்கு தீ வைப்பு
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தீ வைத்தனர்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், அவரது தொகுதிக்கு சென்றபோது மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் உயிரிழந்தார்.
பெண்கள் உட்பட சுமார் 40 மாவோயிஸ்டுகள் கூட்டமாக வந்து இந்த தாக்குதலை நடத்தினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்லப்பட்ட சர்வேஸ்வர ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, இன்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, விசாகப்பட்டினம் அருகே அரகு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள், அரக்கு மற்றும் தும்மிரிகூடா காவல் நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகின. காவல்துறையின் அலட்சியமே இந்த தாக்குதலுக்கு காரணம் என குற்றம்சாட்டிய எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள், இது தொடர்புடைய தீவிரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.