கருணாஸ் கைது... அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த 16ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்த காவல்துறை, அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பலரும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

கருணாஸ் விவகாரத்தில் அரசு இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசும் காவல்துறையும் அஞ்சுவதாக விமர்சித்த அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ கருணாஸ் ஆளும் கட்சிக்கு எதிராக பேசி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உணர்ச்சிவசப்பட்டு அவதூறாக பேசியதற்கு கருணாஸ் மன்னிப்பு கேட்ட பிறகும், அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அடவாடியாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். யாருக்கோ அச்சப்பட்டு தமிழக அரசு கருணாஸை கைது செய்திருப்பதாக, அவர்கள் விமர்சித்துள்ளனர்.

More News >>