பேஸ்புக்கில் புதிதாக டேட்டிங் சேவை-இனி நான் சிங்கிள் இல்ல டோவ்
சமூக ஊடகங்களுக்கு முன்னோடியாக திகழும் பேஸ்புக் நிறுவனம், கடந்த மே மாதம் தனது வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் கூட்டத்தில் அறிவித்த டேட்டிங் சேவையை முதன் முறையாக கொலம்பியாவில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
டேட்டிங் செயலிகள் எனப்படும் தங்களுக்கேற்ற துணையை இணையதள செயலிகள் மூலம் கண்டறியும் வசதி உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள இளைஞர்களிடையே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. திண்டேர், காபி மீட்ஸ் பாகல், ஹிங்கே போன்ற செயலிகள் அவற்றில் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில், உலகின் மிகப் பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், ஏற்கனவே அறிவித்திருந்தபடி தனது டேட்டிங் சேவையை முதல் முறையாக சோதனை முயற்சியில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு டேட்டிங் செயல்களில் உள்நுழைவதற்கு பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருக்கின்ற நிலையில், பேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது பயன்பாட்டாளர்களிடையே பெரூம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த டேட்டிங் செயலி அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டு தற்போதுள்ள பேஸ்புக் செயலியிலேயே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, தற்போது நீங்கள் பயன்படுத்திவரும் சாதாரண பேஸ்புக் செயலியிலேயே இந்த டேட்டிங் வசதி அந்தந்த நாட்டில் செயற்பாட்டிற்கு வரும்போது சேர்க்கப்படுமென்றும், உங்களது பேஸ்புக் கணக்கு விவரங்களை பகிராமலே மற்றவர்களுக்கு இந்த வசதியை பயன்படுத்த முடியுமென்று பேஸ்புக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.