கேரள வெள்ள நிவாரண நிதிக்காக.. முதல் பட சம்பளத்தை முழுதாய் வழங்கிய துருவ் விக்ரம்!

பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதிக்காக தனது முதல் படத்தின் சம்பளம் முழுவதையும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து துருவ் விக்ரம் இன்று அளித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘வர்மா’. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டராகவும், மூன்று மடங்கு வசூலை வாரி வழங்கிய படமாகவும் அமைந்த ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக ‘வர்மா’ படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில், தமிழில் அறிமுக நாயகி மேகா நடித்துள்ளார். வேலைக்காரி கதாபாத்திரத்தில், காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். படத்தில் வரும் நடிகையாக ரைசா வில்சன் நடித்துள்ளார். விக்ரமுடன் உள்ள நெருங்கிய நட்பின் காரணத்தினால், முதல் முறையாக துருவ் விக்ரமுக்காக ரீமேக் படத்தை இயக்கியுள்ளார் பாலா.

துருவ் விக்ரமின் பிறந்த நாள் நேற்று படத்தின் டீஸர் வெளியீட்டுடன் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று, வர்மா படத்திற்காக துருவ் விக்ரம் பெற்ற முழு சம்பளத்தையும் பெருமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். முன்னதாக நடிகர் விக்ரமும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.35 லட்சம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து நிதியை துருவ் வழங்கினார். அவருடன் ‘வர்மா’ படத்தின் தயாரிப்பாளர்கள் முகேஷ் ஆர். மேத்தா மற்றும் ஏ.வி. அனூப் ஆகியோர் உடனிருந்தனர்.

 

More News >>