அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகள் இணைப்பு?
அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி குழுவுடன் இணைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள், இணை இயக்குனர்கள் 32 மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மை கல்வி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளின் தற்போதைய நிலைமை , மாணவர்களுடைய எண்ணிக்கை , மத்திய மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நிலை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறைவான மாணவர்கள் கொண்ட அரசு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உடன் இணைப்பது குறித்தும் , சமக்ர சிக்ஷா அபியான் என்ற திட்டத்தின் கீழ் இந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் 1500 பள்ளிகள் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 878 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 32 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்பது அதிர்ச்சியான தகவல் . 249 பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது. மீதமுள்ள பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். மாத இறுதிக்குள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்காத ஆரம்பப் பள்ளிகளை வேறு அரசுப் பள்ளிகளோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.