இதயத்தை உருகவைத்த இறுதி பிரியாணி !
வயிறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துபாயைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், தனது வயிற்றை ஆபரேஷன் செய்து முழுமையாக அகற்றும் முன்னர், இறுதியாக பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பலரின் இதயத்தை உருகவைத்துள்ளது.
துபாயைச் சேர்ந்த குலாம் அப்பாஸ் என்பவருக்கு நீண்ட காலமாக வயிற்றில் பிரச்னையை இருந்துள்ளது. திடீரென உடல் எடை குறைதல் மற்றும் அடிக்கடி வாந்தி வருவது போன்ற உடல் உபாதைகளால் அவதிப்பட்ட அப்பாஸ், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவ பரிசோதனையில், அவருக்கு மூன்றாம் கட்ட வயிற்று புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். வயிற்றுப் பகுதியை முழுமையாக ஆபரேஷன் செய்து எடுக்காவிடில், உயிர் வாழ முடியாது என்றும், வாழ்நாள் முழுவதும் மருந்துகளின் உதவியோடு மட்டுமே வாழ முடியும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனால், வேதனைப் பட்ட அவர், தனது மனைவி மற்றும் இரு மகன்களின் எதிர்காலத்தை காணும் ஆசையில், ஆபரேஷனுக்கு சம்மதம் தெரிவித்தார்.
ஆபரேஷன் அறைக்கு செல்வதற்கு முன்னர், அவரது மனைவி சமைத்துக் கொண்டு வந்த பிரியாணியை இறுதியாக ரசித்து, ருசித்து அவர் சாப்பிடுவதை கண்ட மருத்துவர்கள் நெஞ்சுருகி போயினர்.
கலீஜ் டைம்ஸ் வெளியிட்ட இந்த செய்தி இணையதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அப்பாஸுக்கு ஒன்றரை வயதில் ஒரு குட்டிப் பையனும், ஆறு வயது நிரம்பிய பெண் குழந்தையும் உள்ளனர்.
வயிறு இல்லாமல் உயிர் வாழ முடியுமா?
வயிறு இல்லாமல் உயிர் வாழ முடியுமா? என்பது இந்த செய்தியை படிக்கும் அனைவருக்கும் எழும் முதல் மற்றும் முக்கியமான சந்தேகம் ஆகும்..
நமது உடலில் உள்ள வயிறு பகுதி நாம் உண்ணும் உணவுகளை தேக்கி வைத்து, அதனை உடைத்து, அரைத்து குடலுக்கு செலுத்தும் வேலையை செய்கிறது. வயிறு பகுதி ஆபரேஷன் செய்யப்பட்டால், திட உணவுகளுக்கு பதில் திரவ உணவுகளை சிறிதளவில் உட்கொள்ளலாம். அவை உணவுக் குழாய் வழியாக நேரடியாக குடலுக்கு சென்று, உடலை இயங்கவைக்கும் ஆற்றலை தரும் என அப்பாஸுக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர் அல்-மார்கோசி விளக்கமளித்துள்ளார்.