சென்னையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது!
சென்னை அருகே சொத்துக்காக பெற்றத் தாயை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலைபாலவாக்கம் தெருவைச் சேர்ந்தவர் ராணியம்மாள் (52). இவருடைய கணவர் ஞானபிரகாசம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராணியம்மாளின் மூத்த மகன் பெங்களூருவில் உள்ளார். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகன் பரன்பாஸ்க்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ராணியம்மாளின் சொத்தை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று பரன்பாஸ் (36) கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ராணியம்மாள், பிள்ளைகள் அனைவருக்கும் சமமாகத்தான் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு குடித்து விட்டு வந்த பரன்பாஸ், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாய் ராணியம்மாளை கட்டையால் அடித்து சராமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் ராணியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தப்பியோடிய பரன்பாஸை கைது செய்தனர். சொத்துக்காக பெற்றத் தாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.