திருச்சி முக்கொம்பில் தடையை மீறி விவசாயிகள் போராட்டம்

திருச்சி முக்கொம்பு மேலணை பகுதியில் விவசாயிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன்பாக, திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட மாவடங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படுள்ள, தற்காலிக தடுப்பணையை ராணுவத்தினரை கொண்டு பலப்படுத்த வேண்டும்.நிரந்தரமாக அமைக்கப்பட உள்ள புதிய கதவணைப் பாலப்பணிகளை தாமதமின்றி உடனடியாக துவங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, போலீசாரின் தடையை மீறி முக்கொம்பு வந்தடைந்தனர். அங்கு மணல் கொள்ளைக்கு எதிராகவும், புதிய பாலத்தை விரைவாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனர்.

போராட்டக்காரர்கள் திருச்சி அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக செல்ல, போலீசார் தடை விதித்திருந்தனர்.மீறி செல்பவர்களை கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்ல போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

திருமண மண்டபத்தில் மதிய உணவும் தயார் நிலையில் இருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள், 'நாங்கள் நடந்து ஊர்வலமாக செல்ல போவதில்லை. வாகனம் ஏற்பாடு செய்திருக்கிறோம். முக்கொம்பு தவிர வேறு எங்கும் வழியில் நிறுத்த மாட்டோம். எங்களை கைது செய்யாதீர்கள். வாகனத்தில் செல்ல அனுமதியுங்கள்' என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களை வாகனத்தில் முக்கொம்பு செல்ல போலீசார் அனுமதித்தனர். தமிழகம் முழுவதும், சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்ற சட்டத்தை மீறி, ஒரு சரக்கு லாரி, இரண்டு சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

More News >>