நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா? - கொந்தளித்த அமைச்சர் ஜெயக்குமார்
குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக படுதோல்வி அடைந்ததும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பிறகு டிடிவி தினகரன் ஆதர்வாளர்களான நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், "காலம் கடந்து தினகரன் ஆதரவாளர்களை நீக்குவதால், எடப்பாடி - ஓபிஎஸ் ஆண்மை இல்லாதவர்கள் [கையாலாகாதவர்கள்] (Impotent)" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஆடிட்டர் குருமூர்த்தி யார் கிங் மேக்கரா என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
மேலும், "அவதூறு கருத்தை பதிவிட்ட குருமூர்த்தி மீது அவசியம் இருந்தால் வழக்கு தொடருவோம். குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.