ஃபேஸ்புக்கின் இந்திய துணை தலைவராகிறார் அஜித் மோகன்
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் ஹாட்ஸ்டார் பிரிவின் தலைமை செயல் அதிகாரியான அஜித் மோகன், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார் என்று ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உதய் சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய பிரிவின் மேலாண்மை இயக்குநர் உமங் பேடி பதவி விலகியதையடுத்து, இந்திய பிரிவுக்கான தலைமைக்கு ஃபேஸ்புக் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. மோகன் நியமிக்கப்பட்டதன் மூலம் ஓராண்டு தொடர் முயற்சி முற்றுப் பெற்றுள்ளது.
அஜித் மோகன், மெக்கின்ஸே நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகத்தில் பணியாற்றியவர். அப்போது பன்னாட்டு ஊடக நிறுவனங்களோடு இணைந்து பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். இந்தியாவில் ஹாட்ஸ்டார் நிறுவனம் தொடங்கப்படவும் வளர்ச்சி பெறவும் உதவியவர்.
"ஃபேஸ்புக் நிறுவனத்தை பொறுத்தமட்டில் இந்தியா மிக முக்கியமான நாடாகும். மக்களை ஒன்றுபடுத்தி, சமுதாயமாக கட்டமைப்பதை சவாலாக கருதி செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் எங்கள் முதலீடு முக்கியத்துவம் வாய்ந்தது. அஜித்தின் ஆழமான அனுபவம் இந்தியாவிலுள்ள சமுதாயங்கள், நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் கொள்கையை வடிவமைக்கும் தலைவர்களுடன் நல்ல உறவு பேணுவதற்கு உதவும் என்று நம்புகிறோம்," என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் டேவிட் பிஸ்செர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தைப்படுத்துதல், பங்குதாரர்கள், கொள்கை முடிவுகள் மற்றும் தொடர்பு ஆகிய செயல்பாடுகளுக்கு அஜித் மோகன் பொறுப்பு வகிப்பார் என்று தெரிகிறது. ஃபேஸ்புக்கின் இந்திய பிரிவை வடிவமைக்கும் பொறுப்பை தாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும், இது தனித்துவம் கொண்ட ஓர் அரிய வாய்ப்பாகும் என்றும் அஜித் மோகன் தெரிவித்துள்ளார்.