நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிராக ஹெச்.ராஜா தரப்பு முறையீடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தரப்பு முறையீடு செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் சனிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை அவதூறாகப் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனிடையே, நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ராமனி, துரைசாமி அமர்வு முன்பு எச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் தினகரன் முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தான் தாமாக முன்வந்து வழக்கு தொடர முடியும் எனவும் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர முடியாது எனவும் முறையீடு செய்தார். இதனை கேட்ட தலைமை நீதிபதி, அவமதிப்பு வழக்கு தொடர்பான உத்தரவு நகலை தாக்கல் செய்தால், ஆய்வு செய்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

More News >>