விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுதலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விருது விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வெயிட்லிப்டிங் வீராங்கனை மீரபாய் சானுவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார்.

கேல் ரத்னா விருதுக்கு கோலி மற்றும் மீராபாய் சானு ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக அறிவித்தபோது, இந்திய குத்துச்சண்டை சாம்பியன் பஜ்ரங் புனியா, தனக்குத் தான் கேல்ரத்னா விருதினை வெல்லும் தகுதி உள்ளதாக, கடந்த வியாழனன்று விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரை சந்தித்து தனது விளக்கத்தையும் அதிருப்தியையும் தெரிவித்தார். ஆனால், அவருக்கு விளையாட்டுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கேல் ரத்னா விருதுக்கு கோலி தகுதி வாய்ந்தவரா? என்ற கேள்விக்கு சந்தேகமே இல்லாமல் பல சாதனைகளை கடந்த பல வருடங்களாக, சொந்த மண்ணிலும், வெளிநாட்டு தொடர்களிலும், தனது அபார ஆட்டத்தால் கோலி நிரூபித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு இறுதியில், சர்வதேச கிரிக்கெட் பிரிவுகளில் 2818 ரன்களை கேப்டன் கோலி விளாசியுள்ளார். இதில்,10 டெஸ்ட் போட்டிகளில் 1059 ரன்களும், 26 ஒரு நாள் போட்டிகளில் 1460 ரன்களும், 10 சர்வதேச டி20 போட்டிகளில் 299 ரன்களையும் எடுத்துள்ளார் விராட் கோலி.

இவரின் இந்த அற்புதமான ஆட்டம் 2018ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பங்கேற்ற கோலி, இதுவரை 871 ரன்கள் குவித்துள்ளார்.

விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்பட்டு வருகிறது. மெடல் மற்றும் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை விருதாக ஒவ்வொரு வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கேப்டன் விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கு வழங்கப்பட்டது. தனது கணவர் கோலிக்கு விருது கிடைப்பதை மனைவி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா புன்னகையுடன் கைதட்டி நேரில் கண்டு ரசித்தார். இணைய தளங்களில் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருதையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார்.

More News >>