ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு குறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்களை சந்தித்து வந்தார். இதனால், தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.
இந்நிலையில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று தொடங்கி ஆறு நாள்களுக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.
அப்போது பேசிய ரஜினிகாந்த், “டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும். அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும்.
அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்கிறேன். எனினும் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பேன்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது, ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க யார் வந்தாலும் வரவேற்போம்” என்றார்.
இது குறித்து கூறியுள்ள நடிகர் ஜீவா, “ரசிகர்களிடம் வீரம் உள்ளது, ரஜினியிடம் வியூகம் உள்ளது.தூய்மையான அரசியலே ரஜினியின் நிலைப்பாடு, அதற்காகவே காலம் தாழ்த்தி வந்தார்” என்றார்.
இது பற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன், “ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்புகிறேன், அவர் வரட்டும்.ரஜினி பாஜகவுக்கு பின்நின்று வருவார் என ஒரு யூகம் உள்ளது, அவ்வாறு இருந்தால் அது வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.