தடையை மீறி சீர்குலைக்கப்படும் நொய்யல் ஆறு

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி நொய்யலாற்றில் திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்வதாக மக்கள் குற்றசாற்று.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூர் மாவட்டம் வழியாகப் பயணித்து கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரியுடன் கலக்கிறது. காவிரியின் முக்கிய துணை ஆறான இந்த நொய்யல் ஆற்றில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கப்பட்டு வருகின்றன. இதனால் நொய்யலாற்றுப் பாசனத்தை நம்பியிருந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போயின.

இதை தொடர்ந்து கரூர் மாவட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனையடுத்து கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்று திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கோ, அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கோ அஞ்சாமல் மீண்டும் மீண்டும் சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால் கரூர் மாவட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாழ்பட்டு வருவதோடு, நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஆற்றங்கரைகளில் முளைத்திருக்கும் புற்களும் விஷத்தன்மை அடைந்து கால்நடைகளுக்கு பல்வேறு நோய்பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு விரைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கருத்து.

More News >>