ஆட்சியாளர்களுக்கு துணிவிருந்தால் வழக்கு போடட்டும்: மு.க.ஸ்டாலின் சவால்
திமுக என்றாலே சிம்ம சொப்பனம் தான். ஆட்சியாளர்களுக்கு துணிவிருந்தால் வழக்கு போடட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால்விட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ராஜபக்சே கூறியதை முழுமையாக படிக்காமல் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தியது. 1956 முதல் தொடர்ந்து ஈழப்பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் இயக்கம் திமுக என மக்களுக்கு தெரியும். பிரபாகரனை கைது செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக ஆட்சியில் தான்.
அதிமுக ஆட்சியின் ஊழல்கள் தொடர்பாக திமுக தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். முதல்வர், ஆட்சியாளர்களுக்கு துணிவிருந்தால், எங்கள் மீது வழக்கு போடட்டும். திமுக என்றாலே சிம்ம சொப்பனம் என்பதால், ஆட்சியாளர்கள் எப்போதும் நடுங்குகிறார்கள். 7 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சிக்கு எதிராக, ஆளுங்கட்சி போராட்டம் நடத்துமா?. திமுக ஒரு கம்பெனி எனப் பேசுவது நாவடக்கம் இல்லாத நூலாந்தரச் செயல்.
தமிழக மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மறைக்க அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்தியுள்ளது. கண்டன பொதுக்கூட்டத்தில் ஈழப்பிரச்சினை பற்றி பேசாமல், திமுக பற்றி பேசியது வேடிக்கையாக உள்ளது. திமுகவுக்கு எதிரான கூட்டத்தால் ஜனநாயகத்தையே நகைச்சுவை பொருளாக்கியுள்ளது அதிமுக. திமுக மீது குற்றஞ்சாட்டி அதிமுக நடத்திய பொதுக்கூட்டத்தை மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.