ஒடிசாவில் தீயணைப்பு படையினரின் தொடர் போராட்டம்..
காவல் துறையினருக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா மாநிலத்தில் தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் போலீசாருக்கு இணையான சம்பளம், ஏழாவது சம்பளக்குழுவின் பரிந்துரை அமல்படுத்துதல், ஒப்பந்த பணியாளர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீயணைப்பு பணியாளர்கள் சுமார் ஐந்தாயிரம் பேர் கடந்த 24ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், 341 தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தீயணைப்பு நிலையங்களுக்கு வரும் அவசர அழைப்புகளை ஏற்க ஆளில்லை. இதனால், மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் நேற்று கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.இதேபோல், பலியாபால் மற்றும் டசப்பல்லா ஆகிய இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் சிக்கி ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.
இதனால், அவசர அழைப்பை ஏற்காமல் கடமை தவறி, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 6 தீயணைப்பு வீரர்களை இடைக்கால பணி நீக்கம் செய்து மாநில தீயணைப்புத்துறை டிஜிபி பி.கே.சர்மா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.