ஜெர்மனியில் அக்கார்டின் மீட்டிய மம்தா பானர்ஜி !
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணிக்கும் அவருடன் மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா, நிதித்துறை செயலர் ஹெச்.கே. திவேதி மற்றும் மேற்கு வங்க தலைமை செயலர் மலாய் தே ஆகியோரும் சென்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் நடந்த வங்க சர்வதேச வர்த்தக உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மானிய, இத்தாலிய பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மம்தா தெரிவித்திருந்தார்.
தமது பயணத்தின்போது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரத்தில் தெருப்பாடகர் ஒருவரை சந்தித்துள்ளார் மம்தா பானர்ஜி. மிக்கி மவுஸ் உடையில் நின்றிருந்த அப்பாடகரின் அக்கார்டின் வாத்தியத்தில் 'We shall overcome' என்ற புகழ் பெற்ற பாடலை மீட்டியுள்ளார் மேற்கு வங்க முதல் அமைச்சர்.
நகரின் மையப்பகுதியில் சேலை அணிந்த இந்திய பெண்மணி ஒருவர், அக்கார்டின் வாசிப்பதை மக்கள் நின்று கவனித்தனர் என்று முதல்வரை சந்தித்த ரூபஞ்ஜனா விவேகானந்த் என்பவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 16ம் தேதி, புறப்பட்ட மம்தா, செப்டம்பர் 28ம் தேதி திரும்பி வருவார் என்று கூறப்படுகிறது.