தணிக்கைக் குழு அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற பரியேறும் பெருமாள்!
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) திரைக்கு வருகிறது.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கதிர், ஆனந்தி நடிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ படம் உருவாகியுள்ளது.
மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மனிதர்களை தனிமைப் படுத்ததல் கூடாது என்ற அரசியல் கருத்தை வலுவாக கொண்டு இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர், நல்ல நோக்கத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமூக கருத்துகள் மேலோங்கி இருப்பதால், எந்த இடத்திலும் படத்திற்கு ஒரு சிங்கிள் ’கட்’ கூட கொடுக்காமல், 2 இடங்களில் மட்டும் மியூட் செய்து ’யு’ சான்றிதழை வழங்கினர்.
குடும்பத்துடன் பரியேறும் பெருமாளையும், கருப்பியும் கண்டு கழிக்கலாம் என தணிக்கைக் குழு அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.
நாளை மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாவதால், ஒரு நாள் தள்ளி வரும் வெள்ளிக்கிழமை ‘பரியேறும் பெருமாள்’ ரிலீசாகிறது. பெரிய படத்திற்கு மக்கள் தரும் ஆதரவை போல, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் நல்ல படத்திற்கும் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பது தயாரிப்பு தரப்பின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.