பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரமில்லை- அமைச்சர் பகீர் தகவல்

அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் முன்பாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 100 நூலகங்களில் ஒய் பை வசதி இலவசமாக ஏற்படுத்தி தருவதற்காக ACT நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் பேசிய அவர், "நிதி நெருக்கடி காரணமாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள், நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்பு எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 7 ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது"

"ஆசிரியர் தகுதித்தேர்வை பொறுத்தவரையில் ஏற்கனவே தேர்ச்சி பெற்று 86 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். காலிப்பணியிடங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சு பகுதி நேர ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More News >>