கிருஷ்ணர் தான் ஜேக்ஸ் பேரோவா? ரகசியத்தை அம்பலப்படுத்திய ஹாலிவுட் கதையாசிரியர் !
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் நாயகன் ஜேக்ஸ் பேரோ கதாபாத்திரம் கடவுள் விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக, அப்படத்தில் பணிபுரிந்த கதையாசிரியர் டெட் எலியாட் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு உலக அளவில் ரசிகர்களை ஏற்படுத்தி தந்த படம் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன். 2003ம் ஆண்டில் வெளிவந்த இதன் முதல் பாகமான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: தி கர்ஸ் ஆஃப் தி பிளாக் பியர்ல் திரைப்படம் உலக அரங்கில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பதிவு செய்தது.
ஜூலை 9, 2003ஆம் வெளியான இப்படத்தை கோரே வெர்பின்ஸ்கி இயக்கினார். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர்களான டெட் எலியாட் மற்றும் டெர்ரி ரோசியோ ஆகிய இருவரும் எழுதினர்.
இதுவரை ஐந்து பாகங்களாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் வெளியாகியுள்ளது. கடற் கொள்ளையர்களை மையமாக வைத்து பேண்டஸி படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான கேப்டன் ஜேக்ஸ் பேரோ கதாபாத்திரத்தில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் ஜானி டெப் நடித்திருந்தார்.
குறும்பு, துருதுருப்பு, கள்ளம், வீரம், கணிப்பு, குறிக்கோள், மயக்கம், மாயை என பல வித்தியாசமான குணங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்த கேப்டன் ஜேக்ஸ்பேரோ கதாபாத்திரம் உலக அளவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஜானி டெப்பிற்கு சம்பாதித்து கொடுத்தது.
இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தை வடிவமைக்க, இந்து கடவுளான மஹா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் கதாபாத்திரத்தின் சாரத்தை எடுத்தே ஜேக்ஸ் பேரோ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் டெட் எலியாட் அண்மையில், வெளியிட்ட தகவல் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் அளித்துள்ளது.
முன்னதாக அவதார் கதாபாத்திரங்கள் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டதற்கு, ராமாயணத்தை படித்த தாக்கத்தினால், ராமரின் வண்ணமான நீல நிறத்தை பயன்படுத்தியதாக ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹீரோ ஹல்க் கதாபாத்திரம் ஹனுமன் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்வோரும் உண்டு!
இந்திய சினிமாவும் தனது தரத்தை உலக சினிமாவுடன் போட்டிப் போடும் அளவிற்கு உயர்த்தி வருகிறது. தற்போது பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வரத் தொடங்கி உலக அளவில் இந்திய சினிமா கவனிக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. இனியாவது இயக்குநர்கள் ரீமேக் சினிமாக்களுக்கு செலவு செய்யாமல், நம்முடைய காவியங்கள் மற்றும் காப்பியங்களை படித்து அதிலிருந்து மாபெரும் கதைகளை உருவாக்கினால், நிச்சயம் இந்திய சினிமா மிகப்பெரிய உச்சம் தொடும் வாய்ப்புள்ளது!