இனிமேல் 10ஆம் வகுப்பு கணக்கு தேர்வுக்கு 2 வினாத்தாள்-சிபிஎஸ்இ

வரும் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு கணக்கு தேர்வில் இரண்டு விதமான வினாத் தாள்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்கள்  இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு கணக்கு தேர்வுக்கு இரண்டு விதமான வினாத் தாள்கள் வழங்க சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. இதில் ஒரு வினா தாளில் வழக்கமான கேள்விகளும், இன்னொரு வினாத் தாளில் கடினமான கேள்விகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஒன்றை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது அதில் தங்கள் தேர்வை மாணவர்கள் குறிப்பிட வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு பின் கணக்கை முக்கியப் பாடமாக எடுத்து படிக்க விரும்புவோருக்காக இந்த இரண்டு தேர்வுகள் வழங்கப்படுவதாக சி.பி.எஸ்.இ தெரிவித்துஉள்ளது.

இரண்டு வினா தாள்களை தயார் செய்வதற்காக, 15 பேர் அடங்கிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மற்றும் பல்கலைகளை சேர்ந்த கணித நிபுணர்கள் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலை சேர்ந்த ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு வினாத்தாள் முறை 10ம் வகுப்பு கணக்கு பாடத்தில் சோதனை முறையில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின் பிளஸ்2வுக்கு விரிவுபடுத்தப்படுவதோடு அனைத்துப் பாடங்களிலும் இந்த இரண்டு வினாத் தாள் முறை அமல்படுத்த  சி.பி.எஸ்.இ திட்டமிட்டுள்ளது.

More News >>