கரகாட்டம் ஆடிய வெளிநாட்டினர்! உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்
சுற்றுலா என்றதும் சிறு வயது பள்ளி சுற்றுலா குடும்ப சுற்றுலாவின் இனிமையான் நினைவுகள் நம் மனதில் வந்து செல்வதை தடுக்க முடியது.
சுற்றுலா செல்ல விரும்பாத மனிதர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. சுற்றுலா மனிதனுக்கு பல்வேறு மனிதர்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொள்ள வழிவகுக்கிறது. பல்வேறு இடங்களை காண்பதால் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்தகைய சுற்றுலாவிற்கான நாள் இன்று உலகம் முழுவது கொண்டடப்படுகிறது.
உலக சுற்றுலா நாள் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொதுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, இன்று நடந்த சில நிகழ்வுகளை பார்ப்போம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயனிகள் கரகாட்ட கலைஞர்களுடன் கரகம் ஆடி மகிழ்ந்தனர். அங்கு தமிழக சுற்றுலாத்துறை, இன்டேக் அமைப்பு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பாரிய கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காளையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைக்கண்டு உற்சாகம் அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கலைஞர்களுடன் தலையில் கரகம் வைத்து ஆடி மகிழ்ந்தனர்.
உலக சுற்றுலா தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். நமது நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால், பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசை வெல்ல முடியும் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கடற்கரைக்கு வந்த மக்கள் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து சென்றனர்.