திருவள்ளுவர் செங்கல்சூளை அதிபர் கொலை! வீடுகளுக்கு தீ சாலைமறியல்

நேற்று திருவள்ளூர் அருகே வீட்டில் இருந்த செங்கல்சூளை உரிமையாளரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். அதை தொடர்ந்து கொலையாளிகளின் உறவினர்கள் வீடு மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்துள்ள மேல்மணம்பேடு ஊராட்சி. இப்பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் வெங்கட்ராமன் (47) செங்கல்சூளை உரிமையாளரான இவருக்கு கிரேஸ் (40) என்ற மனைவியும் ஜனனி(15) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை 8:30 மணிக்கு நடைபயிற்சி முடித்து வீட்டிற்கு திரும்பிய அவர் படுக்கையறைக்குள் சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வெங்கட்ராமனை அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

வெங்கட்ராமன் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர் அங்கு காலை 10:30 மணிக்கு அவர் இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கட்ராமனின் உறவினர்கள், கொலையாளிகளின் உறவினர்கள் என கூறப்படும் 10 பேரின் வீடுகளை அடித்து நொறுக்கினர் இரண்டு வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட வெங்கட்ராமனின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் நேற்று மாலை 4:00 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. அவரின் உடலுடன் வந்த உறவினர்கள் வெள்ளவேடு அருகே 'குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:

கடந்த, 1998ல், இதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், வெங்கட்ராமன் மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான தங்கராஜுக்கு தொடர்பு இருந்தது. கடந்த, 2016ல், தங்கராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழி வாங்கும் முறையில் கொலையில் ஈடுபட்ட மனோகரனின் மகன்களான ராஜேஷ் மற்றும் தினேஷ் உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்போது வெங்கட்ராமனையும் ராஜேஷ் மற்றும் தினேஷ் உட்பட ஏழு பேர் வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்று போலீசார் கூறினர்.

More News >>